தமிழகம் முழுவதும் ஆவின் நிர்வாகத்திற்கு பால் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 55 டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு சொந்தமான 275 பால் டேங்கர் லாரிகள் ஆவின் நிர்வாகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக கடந்த 2016-ம் ஆண்டு டெண்டர் அறிவிக்கப்பட்டு, அதில் கலந்துகொண்ட டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை நிர்ணயம் செய்து கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
மீண்டும் புதிய ஒப்பந்தம் கொண்டுவர காலதாமதம் ஏற்பட்டதால் கூடுதலாக 6 மாத காலம் பழைய டெண்டர் விதிமுறைப்படியும், அதே வாடகைக்கும் டேங்கர் லாரிகளை இயக்குமாறு ஆவின் நிர்வாகம் கேட்டுக்கொண்டதால், லாரி உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்து தங்களின் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதத்துடன் இந்த காலஅவகாசம் முடிந்தும் தற்போது வரை அதே வாடகைக்கு பால் டேங்கர் லாரிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே கடந்த 10-ந் தேதி டெண்டர் அறிவிக்கப்பட்டு, திடீரென ஆவின் நிர்வாகம் அந்த டெண்டரை ரத்து செய்துவிட்டது. இதனால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பால் டேங்கர் லாரிகள் நாளை முதல் வேலைநிறுத்தம்